இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் பயிற்சியாளர் அவதாரம் எடுப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர்.

3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனும் தோனி மட்டுமே. இந்திய அணிக்காக 90 சர்வதேச டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடியவர். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்டிங்கில் அருமையான ஃபினிஷர் என்பதையெல்லாம் கடந்து தோனி அவரது அபாரமான கேப்டன்சிக்கு பெயர்பெற்றவர்.

களத்தில் உள்ளுணர்வின்படியும், சூழலுக்கு ஏற்ப சாமர்த்தியாகவும், நிதானமாகவும் செயல்படக்கூடிய கேப்டன் தோனி. வீரர்களிடமிருந்து அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் உத்தியை அறிந்த வித்தைக்காரர் தோனி.

கடைசியாக 2019 ஒருநாள் உலக கோப்பையில் ஆடிய தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றாலும் தோனி, ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆடிவருகிறார். சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் அவர் தான் என்ற பேச்சு நிலவும் நிலையில், தோனி கிரிக்கெட்டில் அவரது 2வது இன்னிங்ஸை பயிற்சியாளராகத்தான் தொடர்வார் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் நிதானமான தன்மையையும் கொண்ட தோனி, பயிற்சியாளர் பதவிக்கு மிகச்சரியான நபர். அந்தவகையில், தோனி வர்ணனையாளர் ஆகமாட்டார். பயிற்சியாளராகத்தான் ஆவார் என்று தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அவரது யூடியூப் சேனலில் கேள்வி-பதில் செசனில், தோனி குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.