ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபேவின் காட்டடி பேட்டிங்கால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே அணி, இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்‌ஷனா/ப்ரிட்டோரியஸ்/ஆடம் மில்னே.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்னில் ஆட்டமிழக்க, மொயின் அலியும் 3 ரன்னில் நடையை கட்ட, 6.4 ஓவரில் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பாவும் ஷிவம் துபேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பார்ட்னர்ஷிப் அமைத்தபின்னர், 10 ஓவருக்கு பின் அடி வெளுத்துவாங்கினர். 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் அதன்பின்னர் உத்தப்பாவும் துபேவும் அதிரடியாக ஆடினர். 11வது ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்த துபே, 12வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார்.

மேக்ஸ்வெல் வீசிய 13வது ஓவரில் உத்தப்பா 3 சிக்ஸர்கள் விளாச, அந்த ஓவரில் சிஎஸ்கே அணி 100 ரன்களை கடந்தது. 14வது ஓவரில் துபே 2 பவுண்டரிகள் அடித்தார். 15வது ஓவரில் உத்தப்பா ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் அடிக்க, ஷிவம் துபேவும் ஒரு பவுண்டரி அடித்தார். உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். அரைசதத்திற்கு பின்னரும் அடி நொறுக்கி எடுத்தனர். 17வது ஓவரில் உத்தப்பா 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். ஆகாஷ் தீப் வீசிய 18வது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 19வது ஓவரில் துபேவும் உத்தப்பாவும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். அதே ஓவரில் 88 ரன்னில் உத்தப்பா ஆட்டமிழந்தார். கடைசி ஓவரிலும் துபே 2 சிக்ஸர் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால் துபே சதத்தை எட்டும் வாய்ப்பு இருந்தது. ஆனால் துபேவால் சிக்ஸர் அடிக்க முடியவில்லை.

ராபின் உத்தப்பா 50 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்தார். 46 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஷிவம் துபே 95 ரன்களை குவித்தார். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் மட்டுமே அடித்திருந்த சிஎஸ்கே அணி, உத்தப்பா மற்றும் துபேவின் காட்டடியால் கடைசி 10 ஓவரில் 156 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 216 ரன்களை குவித்து, 217 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே.