டெவான் கான்வேவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் அதிரடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 208 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 209 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணிகளும் தலா 2 மாற்றங்களுடன் களமிறங்கின. சிஎஸ்கே அணியில் ஜடேஜா மற்றும் பிரிட்டோரியஸுக்கு பதிலாக ஷிவம் துபே மற்றும் பிராவோ சேர்க்கப்பட்டனர். டெல்லி கேபிடள்ஸ் அணியில் மந்தீப் சிங் மற்றும் லலித் யாதவ் ஆகிய இருவருக்கு பதிலாக ஸ்ரீகர் பரத் மற்றும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணிக்கு டெவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடி 110 ரன்களை குவித்து கொடுத்தனர். 41 ரன்களுக்கு ருதுராஜ் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே அதிரடியாக ஆடி 19 பந்தில் 32ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 49 பந்தில் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

அதன்பின்னர் தோனி 8 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் அடித்து நன்றாக முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 208 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 209 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.