டிஎன்பிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங்கில் கலக்கி வரும் விஜய் சங்கரை சிஎஸ்கே ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கியது. ஜூலை 6ம் தேதி வரை தினமும் விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற உள்ளன. நடப்பு டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

டிஎன்பிஎல் தொடர் 2025

டிஎன்பிஎல் தொடரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்தது. அந்த அணி வீரர் துஷார் ரஹேஜா 43 பந்தில் 79 ரன்கள் விளாசினார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் விஜய் சங்கர், அபிஷேக் தன்வார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆல்ரவுண்டராக ஜொலித்த விஜய் சங்கர்

பின்பு விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் பாபா அபராஜித் 48 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 77 ரன்கள் அடித்தார். விஜய் சங்கர் 23 பந்தில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரியுடன் 41 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் விஜய் சங்கர் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். இதேபோல் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விஜய் சங்கர் 24 பந்தில் 4 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசியுள்ளார்.

விஜய் சங்கரை திட்டித் தீர்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்

விஜய் சங்கரின் இந்த அதிரடி ஆட்டத்தால் சேப்பா சூப்பர் கில்லீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர். ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் விஜய் சங்கரை திட்டித் தீர்த்து வருகின்றனர். நன்றாக விளையாடும் விஜய் சங்கரை சிஎஸ்கே ரசிகர்கள் ஏன் திட்ட வேண்டும்? என நீங்கள் கேட்கலாம். கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் 2025 சீசனில் விஜய் சங்கர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். 6 போட்டிகளில் களம் கண்ட அவர் வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சிஎஸ்கே ரசிகர்கள் விஜய் சங்கரை விமர்சிக்க காரணம் இதுதான்

அதுவும் இந்த தொடர் முழுவதும் விஜய் சங்கர் ஆமை போன்று மிக மெதுவாக விளையாடினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே 184 ரன்களை சேஸ் செய்தபோது இறுதிவரை களத்தில் இருந்த விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்களே எடுத்தார். அவர் விரைவாக ஆடியிருந்தால் அந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கும். சிஎஸ்கேவில் மெதுவாக விளையாடிய விஜய் சங்கர் டிஎன்பிஎல்லில் அதிரடியாக விளையாடி வருகிறார். ''எங்க கூட மட்டும் ஏன்யா, அப்படி விளையாடின''என சிஎஸ்கே ரசிகர்கள் விஜய் சங்கரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.