உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனி, ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்து மீண்டும் தனது அசாத்திய விக்கெட் கீப்பிங் திறமையை நிரூபித்தார். 

தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதோ, அசாத்தியமான அபாரமான கேட்ச்களை பிடிப்பதோ புதிதல்ல. அது பார்த்து பார்த்து பழகியதுதான். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தனது விக்கெட் கீப்பிங் திறமையை ஒரு அபாரமான கேட்ச்சின் மூலம் மீண்டும் காட்டினார். 

பும்ரா வீசிய 27வது ஓவரின் முதல் பந்து, பிராத்வெயிட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும் முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்துக்கும் இடையே சென்றது. அதை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் தோனி. இந்த கேட்ச் தோனியின் விக்கெட் கீப்பிங் திறனை பறைசாற்றும் மற்றுமொரு கேட்ச். 

தோனி பிடித்த இதேமாதிரியான ஒரு கேட்ச்சை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது பிடித்தார். உலக கோப்பையில் தொடர் தோல்விகளை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது விக்கெட் கீப்பிங்கை மட்டுமல்லாது அவரது ஃபிட்னெஸ் இல்லாத உடலமைப்பையும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக விக்கெட் கீப்பிங்கில் மிரட்டினார் சர்ஃபராஸ். அப்படி மிரட்டியபோது, ஒரு அபாரமான டைவ் கேட்ச்சையும் பிடித்தார்.

சர்ஃபராஸ் பிடித்த அதே கேட்ச்சைப் போலவே, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தோனியும் பிடித்தார். இரண்டு கேட்ச்களுமே ஒரே மாதிரியாக இருந்ததால், இரண்டில் எது சிறந்தது என ஒரு கேள்வியை எழுப்பி ஐசிசி டுவீட் செய்திருந்தது. 

தோனியுடன் சர்ஃபராஸை ஒப்பிடவே கூடாது என்று பலரும் டுவிட்டரில் பொங்கி தள்ளியுள்ளனர். சர்ஃபராஸின் உடலமைப்பை வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அவர் ஃபிட்னெஸுடன் இல்லாததால்தான் சரியாக விக்கெட் கீப்பிங் செய்யமுடியவில்லை என விமர்சித்தனர். ஆனால் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து நியூசிலாந்துக்கு எதிராக ஒரு அபாரமான கேட்ச் பிடித்தபோதிலும் அதைவைத்தே மறுபடியும் கலாய்க்கப்படுகிறார் சர்ஃபராஸ் அகமது. 

தோனி - சர்ஃபராஸ் அகமது கேட்ச்சை ஒப்பிட்டு ஐசிசி பதிவிட்டிருந்த டுவீட்டிற்கு சில ரசிகர்கள், மீண்டும் சர்ஃபராஸின் ஃபிட்னெஸை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளனர். 

தோனி ஃபிட்டாக இருப்பதால், கேட்ச்சை பிடித்து கீழே விழுந்தவுடன் உடனே எழுந்துவிட்டார். ஆனால் கீழே விழுந்தபின்னர் தானாக எழமுடியாத சர்ஃபராஸை ஸ்லிப்பில் நின்ற மற்றொரு வீரர் தூக்கிவிட்டார். சர்ஃபராஸால் தானாக எழக்கூட முடியவில்லை என ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

என்னடா இது சர்ஃபராஸுக்கு வந்த சோதனை.. சரியா விக்கெட் கீப்பிங் பண்ணலைனாலும் கலாய்க்குறாய்ங்க.. நல்லா பண்ணாலும் கலாய்க்குறாய்ங்களே...