கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2020-2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. 

வார்னரும் ஸ்மித்தும் தடை பெற்றிருந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் உட்பட பல தொடர்களில் சிறப்பாக ஆடி அணியின் மானம் காத்தவர் உஸ்மான் கவாஜா. வார்னரும் ஸ்மித்தும்  மீண்டும் அணிக்கு வந்துவிட்ட நிலையில், உஸ்மான் கவாஜா தூக்கியெறியப்பட்டுள்ளார். 

அதேபோல டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மட்டிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்யக்கூடிய அருமையான ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலர் நாதன் குல்ட்டர்நைல், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா புறக்கணித்துள்ளது.

மேற்கூறியவர்கள் புறக்கணிக்கப்பட்ட அதேவேளையில், அருமையாக ஆடி கடந்த ஓராண்டாக அசத்திவரும் மார்னஸ் லபுஷேன் அணியின் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அஷ்டன் அகர், ஜோ பர்ன்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் மேத்யூ வேட் ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

டிம் பெய்ன் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் இல்லையென்றால் அவர் இந்த பட்டியலில் கண்டிப்பாக இருக்கமாட்டார். ஏனெனில் அவர் ஒரு பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய அணிக்கு பெரியளவில் பங்களிப்பு செய்வதே இல்லை. ஓரளவிற்கு கூட செய்வதில்லை. கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் படுமோசமாக சொதப்பினார். ஸ்மித்தால் தான் கடந்த ஆஷஸில் ஆஸ்திரேலியாவின் மானம் தப்பியது. 

சிறந்த வீரர்களை மட்டுமே அணியில் வைத்திருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்னும் டிம் பெய்னை ஏன் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அவரை வைத்துக்கொண்டு, மார்கஸ் ஸ்டோய்னிஸ், உஸ்மான் கவாஜா, குல்ட்டர்நைல் போன்ற வீரர்களை ஓரங்கட்டியது கொடுமை. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள்:

ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பாட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், ஜேம்ஸ் பாட்டின்சன், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.