இந்திய அணியின் தேர்வுக்குழுவில் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில், அந்த பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால் அதிலிருந்து சுனில் ஜோஷி, வெங்கடேஷ் பிரசாத், லக்‌ஷமண் சிவராமகிருஷ்ணன், ஹர்வீந்தர் சிங், ராஜேஷ் சவுகான் ஆகியோர் பெயர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டன. 

இவர்களை மதன் லால், ஆர்பி சிங் மற்றும் சுலக்‌ஷனா நாயக் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு(சிஏசி) நேர்காணல் செய்தது. இதையடுத்து சுனில் ஜோஷி தேர்வுக்குழு தலைவராகவும், முன்னாள் உறுப்பினர் ககன் கோடாவின் இடத்திற்கு ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். 

தேர்வாளர்களுக்கான நேர்காணலில் கலந்துகொண்டவர்களிடம் ஒரு பொதுவான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை.. பெரும் புதிராக இருக்கும் தோனி குறித்த கேள்விதான். 

தோனி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக எந்த கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருக்கிறார். உலக கோப்பைக்கு பின்னர் அவர் இந்திய அணியில் இடம்பெறவேயில்லை. அதன் விளைவாக, அவரது பெயர் 2020ம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இது, இனிமேல் தோனி இந்திய அணியில் ஆடமாட்டார், தோனியின் கெரியர் ஓவர் என்று ரசிகர்களை எண்ணவைத்தது. 

ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி20 உலக கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் தோனி இருக்கிறார். அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டுவரும் ரிஷப் பண்ட், படுமோசமாக சொதப்பியதால், கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்யும் நிலை அணியில் உருவாகியுள்ளது. எனவே தோனி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து உலக கோப்பையில் ஆடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். 

Also Read - ஐபிஎல் 2020: இந்த தடவை மிஸ்ஸே ஆகக்கூடாது.. ஆர்சிபியின் அதிரடி கணக்கு.. பெஸ்ட் பிளேயிங் லெவன்

டி20 உலக கோப்பைக்கான அணியில் தோனி இடம்பிடிப்பாரா மாட்டாரா என்பதுதான் பெரும் கிரிக்கெட் உலகில் பெரும் கேள்வியாக இருந்துவரும் நிலையில், அந்த கேள்வியைத்தான் தேர்வாளர்களுக்கான நேர்காணலில் கலந்துகொண்ட போட்டியாளர்களிடம் சிஏசி கேட்டுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.