இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் முடிந்துவிட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமனடைந்தது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை தொடரை கைப்பற்றவிடாமல் தடுத்து சமன் செய்தது. ஆனாலும் ஆஷஸ் கோப்பை ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் இருப்பதால், இந்த தொடர் டிரா ஆனதால் கோப்பை அந்த அணியிடமே இருக்கும்.

கடைசி போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் மார்ஷுக்கு பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ், அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டார். ஆனாலும் மிட்செல் மார்ஷ் தப்பினார். ஏனென்றால் அது நோ பால். வோக்ஸ் வீசிய பந்து மிட்செல் மார்ஷின் பேட்டில் பட்டும் எட்ஜாகி செல்ல, அதை பர்ன்ஸ் பிடித்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு பதிலாக நோ பால் கொடுத்ததால் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். க்ரீஸை தாண்டி கால் வைத்து பந்துவீசினார் வோக்ஸ். அதனால் மிட்செல் மார்ஷ் தப்பினார். 

கிறிஸ் வோக்ஸ் தனது டெஸ்ட் கிரிக்கெட் கெரியரில், அந்த குறிப்பிட்ட ஓவருக்கு முன் வீசிய 867 ஓவர்களில் ஒரு நோ பால் கூட போட்டதில்லை. மிட்செல் மார்ஷுக்கு போட்டதுதான் முதல் நோ பால். அதுவும் விக்கெட் விழுந்திருக்க வேண்டிய பந்து. ஆனாலும் அதன்பின்னர் மிட்செல் மார்ஷை ரூட் அவுட்டாக்கிவிட்டார்.