ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஹோபர்ட்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது. 

பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் வெறும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் பிரையாண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு பின்னர், பிரையாண்ட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கிறிஸ் லின்னும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார். 

பிரையாண்ட்டை தொடர்ந்து லின்னும் அரைசதம் அடித்தார். 36 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து பிரையாண்ட் ஆட்டமிழக்க, கடைசிவரை களத்தில் நின்று அதிரடியாக ஆடிய கிறிஸ் லின், 55 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 88 ரன்களை குவித்தார். மேட் ரென்ஷா தன் பங்கிற்கு 17 பந்தில் 30 ரன்கள் அடித்தார். லின் மற்றும் பிரையாண்ட்டின் அதிரடியால் 20 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 212 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 213 ரன்கள் என்ற கடினமான இலக்கை, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி விரட்டிவருகிறது. 

ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாக கேகேஆர் அணியில் ஆடிய கிறிஸ் லின்னை, இந்த முறை கேகேஆர் அணி கழட்டிவிட்டது. ஐபிஎல் ஏலத்திலும் கிறிஸ் லின்னுக்கு கிராக்கி இல்லை. அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எந்த வித போட்டியுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.  இந்நிலையில், நடப்பு பிக்பேஷ் லீக்கில் அதிரடியாக ஆடி எதிரணிகளை தெறிக்கவிட்டு, தன் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார் கிறிஸ் லின்.