இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்காற்றியவர் முன்னாள் கேப்டன் தோனி. இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர். 

கேப்டன்சியில் இருந்து விலகி இந்திய அணியில் ஆடிவருகிறார். தோனியின் அனுபவமும் விக்கெட் கீப்பிங்கும் பயனுள்ள ஆலோசனைகளும் உலக கோப்பையில் பயன்படும் என்பதால் உலக கோப்பை அணியில் இருந்தார். ஆனால் உலக கோப்பையில் தோனியின் செயல்பாடுகள் பெரியளவில் இல்லை. பேட்டிங்கில் தனது பணியை சரியாக செய்தார். மற்றபடி ஆலோசனையை பொறுத்தமட்டில் முன்பைப்போல் பெரியளவில் ஒன்றும் செய்துவிடவில்லை. 

உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்று வெளியேறியதுமே, அணியின் மறுசீரமைப்பு பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. அதன்பின்னர் மீண்டும் அடுத்த உலக கோப்பைக்கான அணியை உருவாக்க வேண்டும். 

இந்நிலையில், 38 வயதான தோனி உலக கோப்பையுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி தனது ஓய்வு குறித்து எதுவுமே பேசவில்லை. தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். சச்சின் டெண்டுல்கர் போன்ற சீனியர் வீரர்கள் முதல் பிசிசிஐ வரை, தோனி அவராகவே அவரது ஓய்வு குறித்து முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்று ஒதுங்கிவிட்டனர். 

இந்நிலையில், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் தோனி அவராகவே ஓய்வு பெற்றுவிட வேண்டும். ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் வரிசைகட்டி காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே தோனி ஓய்வுபெற வேண்டும். 2020 டி20 உலக கோப்பை அணியில் தோனியை எடுக்கும் ஐடியாவே இல்லை. அதனால் அவரே ஒதுங்குவது நல்லது என்ற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எம்.எஸ்.கே.பிரசாத் கூறியிருப்பதாக பரவும் இத்தகவல் தோனியின் ரசிகர்களை அதிருப்தியும் ஆத்திரமும் அடைய செய்துள்ளது.