கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி இரட்டை சதமடித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் முக்கியமான தூணாகவும் திகழ்ந்தவர் புஜாரா. இந்தியாவிற்காக 95 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6713 ரன்களை குவித்தவர் புஜாரா.
இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த புஜாரா, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்தார். இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றபின் நடந்த முதல் டெஸ்ட் தொடரான இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய 2 சீனியர் வீரர்களுமே புறக்கணிக்கப்பட்டனர்.
அதன்பின்னர் ரஹானே தற்போது ஐபிஎல்லில் ஆடிவருகிறார். ஆனால் புஜாராவை ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் எடுக்காததால், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். கவுண்டியில் சசெக்ஸ் அணியில் ஆடிவரும் புஜாரா, டெர்பிஷைர் அணிக்கு எதிராக இரட்டை சதமடித்தார். சசெக்ஸ் மற்றும் டெர்பிஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெர்பிஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 505 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய சசெக்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டாம் ஹெய்ன்ஸ் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தனர். ஹெய்ன்ஸ் 243 ரன்களுக்கு அவுட்டாக, 201 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார் புஜாரா. 2வது இன்னிங்ஸில் வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு சசெக்ஸ் அணி 513 ரன்களை குவிக்க, போட்டி டிரா ஆனது.
இந்த போட்டியில் புஜாராவின் அருமையான பேட்டிங்கை கண்ட ரசிகர்கள், அவரை பாராட்டிவருகின்றனர். புஜாரா வாழ்த்து மழையில் நனைந்துவருகிறார். தன் மீதான விமர்சனங்களுக்கு கவுண்டி கிரிக்கெட்டில் தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் புஜாரா.
