ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி நடந்தது. ஐபிஎல்லில் மூன்று முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோர் டீம் வலுவாக உள்ளதால், ஒவ்வொரு சீசனுக்கான ஏலத்திலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அணியின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே எடுக்கும் வழக்கமுடையது சிஎஸ்கே. அதைத்தான் இந்த முறையும் செய்தது.

அடுத்த சீசனுக்கான ஏலத்தில், நான்கு வீரர்களை மட்டுமே எடுத்தது சிஎஸ்கே அணி. கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் ஆடி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.5 கோடிக்கு எடுத்தது. கேகேஆர் அணியில் நீண்டகாலம் ஆடிய, இந்திய அணியின் முன்னாள் மற்றும் அனுபவ ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.2 கோடிக்கும், உள்நாட்டு போட்டிகளில் அசத்தலாக பந்துவீசிய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஸ்பின் பவுலரான சாய் கிஷோரை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. 

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சாண்ட்னெர் என பெரிய ஸ்பின் பவுலர்களின் படையே உள்ளது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணின் மைந்தனான சாய் கிஷோரையும் எடுத்தது சென்னை அணி. நிறைய ஸ்பின் பவுலர்கள் அணியில் இருந்தும் கூட, சாவ்லாவை ஏன் ரூ.6.75 கோடி கொடுத்து எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் சந்தேகமும் பரவலாக ரசிகர்களிடத்தில் இருந்தது. 

இந்நிலையில், அதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், பியூஷ் சாவ்லா உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பவுலர். நாங்கள் எப்போதுமே ஸ்பின் பவுலர்களை விரும்பக்கூடியவர்கள். எங்களிடம் பல்வேறு வகையான ஸ்பின் பவுலர்கள் இருந்தாலும் அவர்களை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. பியூஷ் சாவ்லாவை அணியில் எடுக்க விரும்பினோம். அவரால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம். சாவ்லாவை அணியில் எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஃப்ளெமிங் தெரிவித்தார். 

சிஎஸ்கே அணி:

தோனி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், மிட்செல் சாண்ட்னெர், லுங்கி இங்கிடி, முரளி விஜய், ஜெகதீஷன் நாராயண், ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மோனுசிங், கரன் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கேஎம் ஆசிஃப், சாம் கரன், பியூஷ் சாவ்லா, ஹேசில்வுட், சாய் கிஷோர்.