விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது கிரிக்கெட் உலகமே பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில், லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்திய அணி. 

அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு ஆடியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல், இந்திய அணி தோற்று தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக ஆடி அரைசதம் அடிக்க, கடைசி நேரத்தில் அவரும் ஆட்டமிழந்த பின்னர், முழு பொறுப்பும் தோனி மீது இறங்கியது. இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தோனியும் 49வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணியும் தோற்றுவிட்டது. 

தோனி அவுட்டான அந்த தருணம், இந்திய ரசிகர்களின் சோகத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ரசிகர்களுக்கே அப்படியென்றால், வீரர்களும் அதே சோகத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே அனுபவித்திருப்பார்கள். இந்நிலையில், தோனி அவுட்டான பிறகு களத்திற்கு சென்ற சாஹல், அந்த நேரத்தில் தனது மனநிலை குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சாஹல், தோனி அவுட்டானதும் நான் தான் களத்திற்கு சென்றேன். என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டு பேட்டிங் ஆட சென்றேன் என சாஹல் தெரிவித்துள்ளார்.