இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வென்று சாதனைகளை குவித்துவருகிறது. விராட் கோலியின் கேப்டன்சியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும், நம்பரின் அடிப்படையில் அவர் சிறந்த கேப்டனாகவே திகழ்கிறார். இந்திய அணிக்கு அதிகமான டெஸ்ட் வெற்றிகளை குவித்து கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். 

விராட் கோலியின் கேப்டன்சி தற்போது மேம்பட்டுள்ளது. அவர் கொஞ்சம் மோசமாக செயல்பட்ட சமயத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியுடன் ஒப்பிட்டு விமர்சிக்கப்பட்டார். ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு தனது முத்திரையை பதித்ததோடு அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். 

இவ்வாறு ரோஹித் சர்மா - கோலி ஆகியோரின் கேப்டன்சி குறித்த ஒப்பீடு தொடர்ந்து கொண்டேயிருக்கும் நிலையில், இருவரில் யார் சிறந்த கேப்டன் என்று சாஹலிடம் கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். ஸ்போர்ட்ஸ்டாருக்கு அவர் அளித்த பேட்டியில், இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

ரோஹித் - கோலி கேப்டன்சி குறித்து பேசிய சாஹல், ரோஹித் - கோலி ஆகிய இருவரது அணுகுமுறையுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். இருவருமே பவுலர்களை முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிப்பார்கள். ஃபீல்டிங்கையும் பவுலர்களுக்கு வேண்டியவாறு செட் செய்துகொள்ள அனுமதிப்பர். இருவருக்கும் இடையேயான ஒரே வித்தியாசம் ஆக்ரோஷம்தான். விராட் கோலி ஆக்ரோஷமானவர். இது ஒன்றுதான் வித்தியாசமே தவிர, மற்றபடி இருவரது அணுகுமுறையும் ஒரேமாதிரிதான் இருக்கும். குறிப்பாக எனக்கு முழு சுதந்திரத்துடன் ஆட வாய்ப்பு கொடுப்பார்கள். அது எனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவிகரமாக இருக்கிறது என்று சாஹல் தெரிவித்தார்.