ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார் ரிஷப் பண்ட். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாக விரட்டிய அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்திய அணியின் இந்த தோல்விக்கு ரிஷப் பண்ட் முக்கிய காரணம். இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்த ஆஷ்டன் டர்னரை முன்கூட்டியே வீழ்த்த கிடைத்த வாய்ப்பை ரிஷப் பண்ட் தவறவிட்டார். 

உலக கோப்பைக்கு ரிசர்வ் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை அழைத்து செல்ல அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்ததால் அவருக்கு கடைசி 2 போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நான்காவது போட்டியில் ஆடிய ரிஷப் பண்ட் படுமோசமாக சொதப்பினார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் மிகவும் மோசம். பேட்ஸ்மேன் அடிக்கத் தவறும் பந்துகளை பிடிக்காமல் பவுண்டரிக்கு விட்டார். 39வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்பிற்கு ஒரு ஸ்டம்பிங்கை தவறவிட்டார். 44வது ஓவரில் சாஹல் வீசிய முதல் பந்தில் டர்னரை ஸ்டம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். எளிமையான அந்த ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷப் தவறவிட்டதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

44வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டம்பிங்கை மிஸ் செய்த ரிஷப் பண்ட், டாட் பாலாக வேண்டிய 3வது பந்தில் ஒரு ரன்னை வழங்கினார். ஒவ்வொரு ரன்னையும் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த சமயத்தில் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்ய நினைத்து பந்தை தூக்கி வீசினார். இதையடுத்து டர்னரும் கேரியும் ஒரு ரன் ஓடினர். இதுபோன்ற விஷயங்களை அனுபவ வீரரான தோனி அசால்ட்டாக செய்வார். இவர் அவரை போன்று செய்ய நினைத்து மூக்குடைபட்டார். ஸ்டம்பிங்கை தவறவிட்ட ரிஷப்பின் மீது ஏற்கனவே கடுப்பில் இருந்த கேப்டன் கோலி, இந்த ரன்னை கொடுத்த பிறகு வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.