இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்த தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவில் நடக்கிறது. அதற்காக இந்திய அணி அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுவிட்டது. இந்த தொடருக்கான சுற்றுப்பயணத்திற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலியிடம் ரஹானே குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கோலி, ரஹானே டெஸ்ட் அணியின் சிறந்த வீரர். டெஸ்ட் போட்டிகளின் போது எப்போதுமே நாங்கள் இருவரும் ஆலோசித்துக் கொள்வோம். மிக மிக நிதானமான வீரர் ரஹானே. போட்டியின் மீதான புரிதலும் போட்டியின் போக்கை கணிப்பதிலும் ரஹானே சிறந்தவர். இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு அவர் சிறந்த ஃபீல்டர். ஸ்லிப்பில் அவர் பிடிக்கும் கேட்ச்சுகள் அணிக்கு ரொம்ப முக்கியமானது. 

நெருக்கடியான சூழல்களில் அதை சமாளித்து சிறப்பாக ஆடக்கூடியவர். இக்கட்டான சூழல்களில் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார். அவர் தற்போது ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு சிறந்த வீரர். எனவே ஃபார்முக்கு திரும்பி அசத்துவார் என கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.