வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த அந்த போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே அசத்தலாக இருந்தது. கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் பேட்டிங்கில் அசத்தினர். புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் நெருக்கடியை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்த போட்டியில் ஜடேஜாவுடன் குல்தீப் யாதவ் ஸ்பின் பவுலராக களமிறங்கி ஆடினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 2 விக்கெட்டுகள் ஓகே தான் என்றாலும், 59 ரன்களை வாரி கொடுத்துவிட்டார். குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களிடமுமே ஒரு பிரச்னை என்னவென்றால், அதிகமான ரன்களை வாரி வழங்கிவிடுகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான சாஹல் சேர்க்கப்படாமல் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கோலி, வெஸ்ட் இண்டீஸில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் குல்தீப் யாதவால் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும். மேலும் வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரைவிட இடது கை சைனாமேனால் நன்றாக வீசமுடியும் என நம்பியதால் குல்தீப் யாதவை எடுத்தோம் என கோலி தெரிவித்துள்ளார்.