இந்திய அணியின் பேட்டிங் வலுவடைவது போல் தெரியவில்லை. ஆனால் அதற்கு மாறாக, ஏற்கனவே வலுவாக இருக்கும் பவுலிங் மேலும் வலுவடைந்து கொண்டிருக்கிறது. 

பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணி பவுலிங்கில் மிரட்டுகிறது. புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என இந்திய அணி பவுலிங்கில் மிரட்டி கொண்டிருக்கும் நிலையில், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரின் வருகையால் இந்திய அணி பவுலிங்கில் மேலும் வலுவடைந்திருக்கிறது. 

சைனி 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். நல்ல வேகத்துடன் அவர் வீசிவருகிறார். அதேநேரத்தில் தீபக் சாஹர் புதிய பந்தில் நன்கு ஸ்விங் செய்கிறார். புவனேஷ்வர் குமார் என்ற நல்ல ஸ்விங் பவுலரை இந்திய அணி பெற்றிருக்கும் நிலையில், தற்போது தீபக் சாஹரும் கிடைத்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கிய தீபக் சாஹர், 3 ஓவர்கள் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தீபக் சாஹர் புதிய பந்தில் அபாரமாக வீசினார். அவரது பந்தை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளவே முடியாமல் திணறினர்.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, தீபக் சாஹரை புவனேஷ்வர் குமாருடன் ஒப்பிட்டார். திறமையிலும், புதிய பந்தில் பந்துவீசும் திறனிலும் தீபக் சாஹர் அப்படியே புவனேஷ்வர் குமார் மாதிரி என்று கோலி தெரிவித்தார். 

புவனேஷ்வர் குமார் நன்றாக ஸ்விங் செய்வார். புதிய பந்தில் அபாரமாக வீசுபவர். அவரைப்போலவே தீபக் சாஹரும் நன்றாக ஸ்விங் செய்வதோடு புதிய பந்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார்.