இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. 

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. இதையடுத்து ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் ராபின் சிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது. மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 

இந்நிலையில், தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் உள்ள கெய்க்வாட், எதனடிப்படையில் தலைமை பயிற்சியாளரின் தேர்வு இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். வீரர்களை சிறப்பாக கையாளும் திறன் கொண்டவராகவும் நல்ல திட்டங்களை வகுப்பவராகவும் இருக்க வேண்டும். இவை இரண்டும் தான் முக்கியமான தகுதிகள். இவைதவிர வேறு சில தகுதிகளும் தேவை. ஆனால் இவையிரண்டும் மிக முக்கியமானவை. டெக்னிகல் அறிவுடையவராக இருக்க வேண்டும். ஏனெனில் அது இல்லாமல் திட்டங்களே வகுக்க முடியாது என்று கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.