இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 374 ரன்களை குவித்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தும் மேத்யூ வேடும் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ஸ்மித் 142 ரன்களையும் வேட் 110 ரன்களையும் குவித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

398 ரன்கள் என்ற கடின இலக்குடன் நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரத்திற்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை என்ற நிலையில், ராயும் பர்ன்ஸும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் கம்மின்ஸ். முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய பர்ன்ஸ் சதமடித்தார். இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பர்ன்ஸை சோபிக்கவிடாமல் கம்மின்ஸ் வீழ்த்திவிட்டார். இதையடுத்து ஜேசன் ராயுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ராயும் ஆட்டமிழந்ததால் ரூட்டுடன் டென்லி ஜோடி சேர்ந்துள்ளார். 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸ் 5 நாட்களும் பேட்டிங் ஆடியுள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது தொடக்க வீரராக பர்ன்ஸ் களமிறங்கினார். இரண்டாம் நாள் முழுவதும் பேட்டிங் ஆடி, மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பர்ன்ஸ், மூன்றாம் நாளில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்சநேரம் முன்வரை ஆடியது. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தபின்னர், நான்காம் நாள் ஆட்டம் முடியவிருந்த நிலையில், பர்ன்ஸும் ராயும் களத்திற்கு வந்தனர். ஐந்தாம் நாளான இன்றும் களத்திற்கு வந்து ஆடினார் பர்ன்ஸ். ஆனால் சிறிது நேரத்திலேயே அவரை கம்மின்ஸ் வீழ்த்திவிட்டார். 

ஆனாலும் டெஸ்ட் போட்டியின் 5 நாட்களும் பேட்டிங் ஆடி வித்தியாசமான ஒரு பட்டியலில் பர்ன்ஸும் இணைந்துள்ளார். இந்த சம்பவத்தை செய்யும் 10வது சர்வதேச வீரர் பர்ன்ஸ்; 4வது இங்கிலாந்து வீரர். இந்த பட்டியலில் ரவி சாஸ்திரி மற்றும் புஜாரா ஆகிய இரண்டு இந்திய வீரர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.