இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டியில் ஒரு ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 

சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி வெறும் 224 ரன்களை மட்டுமே அடித்த இந்திய அணி, பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் ஆஃப்கானிஸ்தான் அணியை 213 ரன்களுக்கு சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்த கோலி 67 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்பு தோனி மேல் இறங்கியது. தோனியும் கேதரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனாலும் ரொம்ப மந்தமாக ஆடியதால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. ஆனாலும் தோனி களத்தில் நின்றதால், வழக்கம்போல டெத் ஓவர்களில் அடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45வது ஓவரில் தோனி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியாவும் சோபிக்காததால் இந்திய அணி வெறும் 224 ரன்கள் மட்டுமே அடித்தது. 

225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு முதல் ஓவர் முதலே நெருக்கடி கொடுத்தது இந்திய அணி. முதல் 8 ஓவர்களை பும்ராவும் ஷமியும் இணைந்து அபாரமாக வீசினர். தொடக்கம் முதலே அடிக்க முடியாமல் திணறிவந்த ஹஷ்ரதுல்லா சேஸாய் 10 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து நிதானமாக நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான குல்பாதின் நைபை 27 ரன்களில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு ரஹ்மத் ஷாவும் ஷாஹிடியும் இணைந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடியை ஸ்பின்னர்களால் பிரிக்க முடியாததால் பும்ராவுக்கு இரண்டாவது ஸ்பெல்லை கொடுத்தார் கேப்டன் கோலி. 

கோலியின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. இந்திய அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்தி கொடுக்கும் பும்ரா, இம்முறையும் தனது பணியை செவ்வனே செய்தார். ரஹ்மத் ஷா மற்றும் ஷாஹிடி ஆகிய இருவரையுமே ஒரே ஓவரில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா. அதன்பின்னர் தான் இந்திய அணி மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. 

ரஹ்மத் - ஷாஹிடி ஜோடியை நிலைக்க விட்டிருந்தால் இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்திருக்கும். அந்த ஜோடியை பிரித்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. பும்ராவின் அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை திருப்பியது என்பதால் தான், 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமிக்கு கொடுக்காமல் ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.