உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. 

லீட்ஸில் 3 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக கருணரத்னே மற்றும் குசால் பெரேரா ஆகிய இருவரும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 5 ரன்கள் அடித்தனர். இதையடுத்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. பும்ராவின் ஓவரில் கருணரத்னே ஒரு ரன் கூட அடிக்கவில்லை. அந்த ஓவர் மெய்டன் ஆனது. மீண்டும் புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் அடிக்கப்பட்டது. 

அதன்பின்னர் நான்காவது ஓவரை பும்ரா வீச, அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரன்னே எடுக்கமுடியாமல் திணறிய கருணரத்னே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரை ரன்னே கொடுக்காமல் வீசிய பும்ரா, நான்காவது ஓவரிலும் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் கருணரத்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதற்கு அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தை குசால் பெரேரா தூக்கியடிக்க, அது மிட் ஆனுக்கும் மிட் ஆஃபுக்கும் இடையே சென்றது. அதை பிடிக்க குல்தீப்பும் ஹர்திக் பாண்டியாவும் நேருக்கு நேராக ஓடிவந்தனர். குல்தீப்பை பார்த்ததும் ஹர்திக் விலகிவிட்டார். ஆனாலும் குல்தீப் யாதவ் அந்த கேட்ச்சை விட்டார். அதிரடி வீரரான குசால் பெரேராவின் கேட்ச்சை குல்தீப் கோட்டைவிட்டார். 

ஆனாலும் அந்த வாய்ப்பை குசால் பெரேரா பயன்படுத்தி கொள்ளவில்லை. புவனேஷ்வர் குமாரின் ஓவரில் தப்பிய குசால் பெரேரா, பும்ரா வீசிய 8வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்கினார். 18 ரன்கள் அடித்து பும்ராவின் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.