பொதுவாக பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, பும்ராவின் வருகை. இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழும் பும்ரா, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலராக வலம்வருகிறார். 

வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்டுள்ள பும்ரா, குறைந்த தூரமே ஓடி நல்ல வேகத்தை ஜெனரேட் செய்கிறார். பந்துக்கு பந்து வெரைட்டி, நல்ல வேகம், துல்லியமான யார்க்கர் என மிரட்டலாக பந்துவீசி, எதிரணிகளை திணறடித்து வருகிறார். 

குறிப்பாக டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர் பும்ரா. டெத் ஓவர்களில் அவரால் ரன்களை கட்டுப்படுத்த முடிவதற்கான காரணங்களில் ஒன்று அவரது யார்க்கர். டெத் ஓவர்களில் மிக துல்லியமாக யார்க்கர்களை வீசுவார். யார்க்கரின் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். அப்படியில்லையென்றால், ரன்களை வெகுவாக கட்டுப்படுத்திவிடுவார். எப்படி பார்த்தாலும் அணிக்கு சிறப்பான வகையில் பங்களிப்பை செய்து, எதிரணியை வீழ்த்த காரணமாக திகழ்வார். 

பும்ராவிற்கு துல்லியமாக யார்க்கர் வீசுவதை மலிங்கா தான் கற்றுக்கொடுத்திருப்பார் என்று பலரும் நினைக்கலாம். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்காவுடன் இணைந்து பும்ரா ஆடியிருக்கிறார்; ஆடிவருகிறார். எனவே மலிங்கா தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருக்கக்கூடும் என்று நினைக்கலாம். 

ஆனால் தனக்கு துல்லியமான யார்க்கர் வீச மலிங்கா கற்றுத்தரவில்லை என்றும் தான் கற்றுக்கொண்டது எப்படி என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பும்ரா, நிறைய பேர் மலிங்கா தான் எனக்கு துல்லியமான யார்க்கர் வீச கற்றுக்கொடுத்தார் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் எனக்கு களத்தில் எதையுமே கற்றுக்கொடுத்ததில்லை. மனவலிமையை நானாக, அவரிடம் இருந்து கற்றிருக்கிறேன். நெருக்கடியான சூழல்களிலும் மனதை தளரவிடாமல், பதற்றப்படாமல், கோபப்படாமல் பந்துவீசுவது எப்படி? ஒவ்வொரு பேட்ஸ்மேனை வீழ்த்துவதற்கும் அவர் வகுக்கும் திட்டம் ஆகிய இரண்டையும் நான் அவரிடமிருந்து கற்றிருக்கிறேன்.

யார்க்கர் வீச நானாக கற்றுக்கொண்டதுதான். ஆடுகளத்தில் ஆடுவதற்கு முன்பாக ரப்பர் பந்தில் கிரிக்கெட் ஆடிய காலத்தில், அந்த பந்தில் நல்ல சீம் இருக்கும்; நன்றாக ஸ்விங் ஆகும். ஆனால் ஆடுகளம் இல்லை என்பதால், அதில் சீமோ, லெந்த் பந்துகளோ எல்லாம் வீசி விக்கெட் எடுக்கமுடியாது. துல்லியமான யார்க்கர்களை வீசினால் மட்டுமே விக்கெட் வீழ்த்த முடியும். எனவே அப்படி துல்லியமாக ஃபுல் லெந்த் டெலிவரிகள் மற்றும் யார்க்கரை வீசித்தான் கற்றுக்கொண்டேன் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.