பொதுவாக நல்ல பேட்டிங் அணியாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணி, பும்ராவின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

மிகத்துல்லியமான பவுலிங்கின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறார் பும்ரா. தொடக்க ஓவர்களில் ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டை வீழ்த்தி கொடுக்கும் பும்ரா, மிடில் ஓவர்களில் தனது ஸ்பெல்லில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுக்கிறார். பின்னர் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் மற்றும் பவுன்ஸர்களை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அலறவிடுகிறார். 

ஆகமொத்தத்தில் பும்ராவின் பவுலிங்கை விட்டுவிட்டு மற்ற பவுலர்களை அட்டாக் செய்ய நினைக்கும் எதிரணி வீரர்கள், அவர்களிடமும் விக்கெட்டை பறிகொடுத்துவிடுகின்றனர். துல்லியமான பவுலிங்கின் மூலம் உலகின் நம்பர் 1 பவுலராக பும்ரா திகழ்கிறார். 

இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் 8 போட்டிகளில் இந்திய அணி ஆடியுள்ளது. அதில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. அரையிறுதி போட்டியிலும் பும்ரா சிறப்பாக வீசி இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து செல்வார் என்பதில் சந்தேகமே இல்லை. 

இக்கட்டான சூழல்களிலும் கடைசி ஓவர்களிலும் பும்ரா டென்ஷனே ஆகாமல் நிதானமாகவும் தெளிவாகவும் இருந்து தனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார். அவரது நிதானமும் தெளிவும் அவருக்கு மிகப்பெரிய பலம். 

பும்ரா கிரிக்கெட் உலகில் அனைத்து ஜாம்பவான்களாலும் பாராட்டப்பட்டு வருகிறார். ஆனால் பாராட்டுகளையோ அல்லது விமர்சனங்களையோ பும்ரா கண்டுகொள்ளவே மாட்டாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். பாராட்டுகளுக்கோ விமர்சனங்களுக்கோ செவிமடுக்கமாட்டேன். என்னுடைய கவனமெல்லாம் எனது பவுலிங்கை மேம்படுத்துவதிலும், திட்டங்களை சரியாக செயல்படுத்துவதிலும் அணிக்காக நான் செய்ய வேண்டும் என்பதில் மட்டும்தான் இருக்கும் என்று பும்ரா தெரிவித்துள்ளார்.