வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே அதிரடி பேட்டிங், அபாரமான பவுலிங் ஆகிய இரண்டையும் பெற்றிருக்கும் முரட்டு அணியாகத்தான் இருக்கும். தற்போது மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லையென்றாலும், அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒரு அணியாக ஆடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தோல்விகளை தழுவிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான புதிய கேப்டனாக பொல்லார்டு நியமிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக அந்த அணி இந்தியாவுடன் ஆடுகிறது. இந்தியாவிற்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசிய லெஜண்ட் வீரரான பிரயன் லாரா, பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணியை வலுவான அணியாக கட்டமைத்து வளர்த்தெடுக்க வேண்டிய கடமை பொல்லார்டுக்கு உள்ளது. இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அது மிகவும் கடினம். இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் இந்தியாவில் இருந்து கிளம்பும்போது, இந்தியாவிற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை விட வேற லெவலில் உள்ள அணியாக கிளம்ப வேண்டும் என்று லாரா அறிவுறுத்தியுள்ளார்.