உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று பல ஜாம்பவான்கள் தங்களது கருத்தை தெரிவித்துவரும் நிலையில், உலக கோப்பை தொடரின் நாயகனாக யார் திகழ்வார் என்று பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி, கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பும்ரா, ரபாடா என சிறந்த வீரர்கள் இந்த உலக கோப்பை தொடரில் ஆடுகின்றனர். இவர்கள் அனைவருமே உலகின் முன்னணி வீரர்கள். எனவே இவர்களில் யார் இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருது வெல்வார் என்பதை பிரெட் லீ கணித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிரெட் லீ, இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் வார்னர் அசத்த உள்ளார். அவரை இதற்கு முன் இப்படியொரு  வேட்கையில் நான் பார்த்ததேயில்லை. அவரது கிரிக்கெட் வாழ்விலேயே மிகச்சிறந்த பேட்டிங்கை தற்போது ஆடிக்கொண்டிருக்கிறார். வார்னரின் ரன் வேட்கையை அவரது கண்களிலும் அவர் ஆடும் ஷாட்களிலுமே பார்க்க முடியும். உலக கோப்பையில் அவரது விக்கெட்டை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார். அவர்தான் இந்த தொடரின் நாயகனாக ஜொலிப்பார் என பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்த வார்னர் மற்றும் ஸ்மித்தின் தடை முடிந்து மீண்டும் திரும்பினர். உலக கோப்பையில் ஆட உள்ள இவர்கள் இருவரும் அதற்கு முன்னதாக ஐபிஎல்லில் ஆடினர். சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய வார்னர், 12 இன்னிங்ஸ்களில் ஆடி 692 ரன்களை குவித்து ஐபிஎல் 12வது சீசனின் டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். தடையிலிருந்து மீண்டு வந்த வார்னர், அதன்பின்னர் கூடுதல் ஆக்ரோஷத்துடன் ஆடிவருகிறார். அவரது பேட்டிங்கும் ஃபார்மும் ஆஸ்திரேலிய அணிக்கு கண்டிப்பாக பெரிய பலமாக அமையும்.