இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கான பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஒயின் மோர்கன் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஆனால் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டின் தலைமையில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்துவந்த நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து அண்மையில் ரூட் விலகினார்.

இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

அதேவேளையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டனும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

கேரி கிறிஸ்டனை போலவே மெக்கல்லமும் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட், 260 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் ஆடிய பிரண்டன் மெக்கல்லம், 14500 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்ட மெக்கல்லம் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது இங்கிலாந்துக்கு பலம் சேர்க்கும்.