ஐபிஎல் 13வது சீசன் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபரில் தொடங்குவதாக இருந்த டி20 உலக கோப்பை ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதால், டி20 உலக கோப்பை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13வது சீசன் நடத்தப்படவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டிற்கு செல்கிறது. ஐபிஎல் நடப்பது உறுதியாகிவிட்டதால் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. வீரர்கள் பயிற்சியை தொடங்கிவிட்டனர். 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மீண்டுமொரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலும், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் உள்ளன. 

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த ஐபிஎல் டைட்டிலை எந்த அணி வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப்  சேனலில் பேசியுள்ள பிராட் ஹாக், மும்பை இந்தியன்ஸ் அணிதான் இந்த சீசனிலும் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு உள்ளது. நான் மும்பை இந்தியன்ஸை தேர்வு செய்ய காரணம், அந்த அணியின் டாப் 4 வீரர்கள் வலுவாக உள்ளனர். சிறந்த ஆல்ரவுண்டர்களும் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலிங்கில் புதிய பந்திலும் டெத் ஓவர்களிலும் அசத்துவதற்கு பும்ரா மற்றும் மலிங்கா என்ற 2 ஜீனியஸ் பவுலர்கள் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நீண்டகாலமாக ஆடாமல் ஓய்வில் இருந்திருக்கிறார். அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது. இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு கூடுதல் எனர்ஜியை கொடுக்கும். எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தான் தொடர் நாயகன் விருதை வெல்வார் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.