வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அப்படியான ஒரு பதிலடியை வெஸ்ட் இண்டீஸ் பவுலர் வில்லியம்ஸுக்கு கொடுத்துள்ளார் கோலி. கோலி இந்த பதிலடியை கொடுத்திருந்திருக்க மாட்டார். ஆனால் அதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே வில்லியம்ஸ் தான். 

ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 207 ரன்களை குவித்து, 208 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் பவுண்டரிக்கு நிகராக சிக்ஸரும் விளாசினார். வெறும் 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து, கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். 

வில்லியம்ஸ் வீசிய 13வது ஓவரில் பந்தை அடித்துவிட்டு கோலி ரன் ஓடும்போது, அவரை மோதும்படியாக ஓடிவந்து அவரது கவனத்தை திசைதிருப்புவதற்காக, அவரை நோக்கி வேகமாக ஓடிவந்தார் வில்லியம்ஸ். ஆனால் கோலி, ஒதுங்கி ஓடிவிட்டார். வேண்டுமென்றே ஓடிவரவில்லை, பந்தை பிடிப்பதற்காகத்தான் வந்தேன் என்கிற ரீதியில், இரு கைகளையும் தூக்கி சரணடைந்தார் வில்லியம்ஸ். ஆனாலும் செம கடுப்பான விராட் கோலி, அம்பயரிடம் முறையிட்டார். பின்னர் அதே கடுப்புடன் அந்த விஷயத்திலிருந்து வெளிவந்து அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். 

பின்னர் ஹோல்டர் வீசிய 15வது ஓவரில் தனது 23வது டி20 அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி, வில்லியம்ஸ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸர் விளாசிய கோலி, வில்லியம்ஸின் ஐகானிக் கொண்டாட்டமான நோட்புக் கொண்டாட்டத்தை, அவருக்கு எதிராக செய்து காட்டினார். வழக்கமாக வில்லியம்ஸ் விக்கெட் வீழ்த்தினால், நோட்புக்கில் எழுதுவதுபோல கொண்டாடுவது வழக்கம். இதே கொண்டாட்டத்தை, கோலிக்கு எதிராகவும் அவர் செய்துள்ளார். ஜமைக்காவில் நடந்த ஒரு போட்டியில் கோலியை வீழ்த்திவிட்டு, தனது ஐகானிக் கொண்டாட்டத்தின் மூலம் மகிழ்ச்சியை கொண்டாடினார் வில்லியம்ஸ். 

அதை நினைவில் வைத்திருந்த விராட் கோலி, வில்லியம்ஸின் பந்தை பறக்கவிட்டு பின்னர், வில்லியம்ஸை போன்றே செய்துகாட்டி, பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ டுவிட்டரில் செம வைரலாகிவருகிறது. நெட்டிசன்கள் வில்லியம்ஸை பயங்கரமாக கிண்டலடித்துவருகின்றனர். 

இந்நிலையில், விராட் கோலியிடம் வம்பிழுக்க வேண்டாம் என எதிரணி வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள அமிதாப் பச்சன், கோலியிடம் வம்பு இழுக்காதீங்கனு, எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஆனால், நீங்க(எதிரணி வீரர்கள்) என்னுடைய பேச்சை கேட்கவே மாட்ரீங்க.. இப்போ பாருங்க வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா கோலி எப்படி பதிலடி கொடுத்திருக்காருனு.. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் முகத்தை பாருங்க.. கோலி எந்தளவுக்கு அவர்களை பயமுறுத்தியிருக்காருனு தெரியும் என்று அமிதாப் பச்சன் இந்தியில் டுவீட் செய்துள்ளார்.