இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் ட்ராஃபோர்டில் நடந்துவருகிறது. இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்துடன் ஆடிவரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடும் இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸை அருமையான பவுலிங்கின் மூலம் சீக்கிரமாகவே வீழ்த்தினார் கீமார் ரோச்.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் கடந்த சில ஆண்டுகளில் அதீத வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் அவரது ஆட்டத்திறன் அபரிதமாக மேம்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி இக்கட்டான சூழல்களில் இருக்கும்போதெல்லாம் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, மேட்ச் வின்னராக திகழ்கிறார் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். தடுப்பாட்டம், அதிரடி ஆட்டம் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் ஸ்டோக்ஸ், சூழலுக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அருமையாக ஆடி, இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுக்கிறார்.

அந்தவகையில், பென் ஸ்டோக்ஸ் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதற்கே பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் தான் காரணம். முதல் இன்னிங்ஸில் 176 ரன்களை குவித்த ஸ்டோக்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விரைவில் ரன்களை குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அணியை வெற்றி பெற வைக்க வேண்டுமென்ற வேட்கையில், அந்த பணியை செவ்வனே செய்தார் ஸ்டோக்ஸ். இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 57 பந்தில் 78 ரன்களை குவித்தார். அவரால் தான் அந்த போட்டியில் இங்கிலாந்து வென்றது. அவர் தான் ஆட்டநாயகனும் கூட. 

இந்நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவரும் நிலையில், இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸை களத்தில் நிலைக்கவிடாமல் விரைவில் வீழ்த்திவிட்டார் கீமார் ரோச். அதுவும் அருமையான பந்தில், பென் ஸ்டோக்ஸ் என்ற சிறந்த வீரரை, அவரே பிரமிக்கும் அளவிற்கு மிரட்டலான பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் ரோச். 

அரௌண்ட் தி விக்கெட்டில் கீமார் ரோச் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசிய பந்து, ஸ்டோக்ஸுக்கு ஏய்ப்பு காட்டி ஸ்டம்ப்பை கழட்டியது. 20 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார் ஸ்டோக்ஸ். ரோச்சின் அந்த பந்தை தவறவிட்ட அடுத்த சில நொடிகள் பிரமித்து நின்றார் ஸ்டோக்ஸ். 

அதன்பின்னர் போப்பும் பட்லரும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்துள்ளது. போப் 91 ரன்களுடனும் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்வார்கள். இப்போதைக்கு இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நல்ல நிலையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.