உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தான் ஹீரோ. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். 

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனின் விக்கெட்டுக்கு பிறகு பட்லர், மொயின் அலி, வோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி 89 ரன்கள் குவித்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் தான் அந்த அணி 300 ரன்களை கடந்தது. இல்லையெனில் 20-30 ரன்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும். 

பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்ட ஸ்டோக்ஸ், பவுலிங் வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஃபீல்டிங்கில் 2 கேட்ச்கள் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். கிரிக்கெட்டில் உள்ள அனைத்து வகையிலான பெர்ஃபாமென்ஸ்களையும் செய்தார் ஸ்டோக்ஸ். பேட்டிங், பவுலிங், கேட்ச், ரன் அவுட் என அனைத்தையுமே ஒரே போட்டியில் செய்தார். 

இதில் ஃபெலுக்வாயோவிற்கு பிடித்த கேட்ச் அனைவரையுமே மிரளவைத்தது. அபாரமான கேட்ச் அது. 35வது ஓவரின் முதல் பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார் ஃபெலுக்வாயோ. அந்த பந்தை ஒற்றை கையில் அபாரமாக பிடித்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் அபாரமான கேட்ச் பிடித்ததும் போதும். மொத்த இங்கிலாந்து அணியும் அவரிடம் ஓடிச்சென்று மகிழ்ச்சியை கொண்டாடியது. ரசிகர்கள் மட்டுமல்லாது எதிரணி வீரர்களே வியந்து பார்த்த கேட்ச்சின் வீடியோ இதோ...