ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி மழையின் குறுக்கீட்டால் டிராவில் முடிந்தது. மூன்றாவது போட்டி லீட்ஸில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் அடிக்க, அதுவே பரவாயில்லை எனுமளவிற்கு வெறும் 67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன் அடித்த ஒரே வீரர் டென்லி தான். அதுவும் 12 ரன்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். வெறும் 67 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. 

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்பட்டது. 

359 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ராய் ஆகிய இருவரும் மறுபடியும் சொதப்பினர். பர்ன்ஸ் 7 ரன்களிலும் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, ரூட்டும் டென்லியும் சேர்ந்து அதை செய்து கொடுத்தனர். 

ரூட் - டென்லி ஆகிய இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், டென்லி சரியாக 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரூட்டும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. அதன்பின்னர் ஸ்டோக்ஸுடன் சேர்ந்து பேர்ஸ்டோ மட்டும் கொஞ்ச நேரம் ஆடினார். ஆனால் அவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. பேர்ஸ்டோ 36 ரன்களில் நடையைக்கட்ட, அவரை தொடர்ந்து பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரும் தலா 1 ரன்னில் வெளியேறினர். 

ஸ்டோக்ஸ் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் பேர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், ப்ராட் என விக்கெட்டுகள் சரிந்தன. 286 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இங்கிலாந்து அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 73 ரன்கள் தேவை. அதன்பின்னர் அதிரடியை கையில் எடுத்த ஸ்டோக்ஸ், ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என பாரபட்சம் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 

ஸ்டோக்ஸ் ஒருமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கொண்டிருக்க, மறுமுனையில் தனது விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினார் லீச். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், விக்கெட் சரிவிற்கு பின்னர், இக்கட்டான சூழலில் ரிஸ்க் எடுத்து ஆடினார். 70 பந்துகளுக்கு மேல் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டோக்ஸ், 219 ரன்களில் 135 ரன்கள் என்ற இன்னிங்ஸை முடித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணிக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த ஹேசில்வுட்டின் ஒரு ஓவரில், ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி மிரட்டினார் ஸ்டோக்ஸ். 

ஹேசில்வுட், கம்மின்ஸ், லயன் ஆகிய ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பவுலர்களின் பந்துகளெல்லாம் பறந்தன. ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தவும் முடியாமல் அவரது அதிரடியை கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறினர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 219 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 135 ரன்களை குவித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் அபாரமான பேட்டிங்கால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 

இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை கிடைக்கும். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக ஸ்டோக்ஸின் இந்த இன்னிங்ஸ் அமைந்துவிட்டது.