உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக இங்கிலாந்து பார்க்கப்படுகிறது. பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணிதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் மீதான அனைவரின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் சிதைக்காத வகையில், அந்த அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ கோல்டன் டக் ஆகி வெளியேறிய போதும், ரூட்டும் ராயும் பார்ட்னர்ஷிப் அமைத்து இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தனர். அதன்பின்னர் இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் அபாரமாக ஆடினர். அதிரடியாக ஆடிய இயன் மோர்கன் 57 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆனால் மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ் 89 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடக்க உதவினார். 

சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 49வது ஓவரில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்களை குவித்தது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மளமளவென சரிந்தபோதும் மறுமுனையில் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி ஸ்டோக்ஸ் ரன்களை சேர்த்ததால்தான் இங்கிலாந்து அணி 300 ரன்களை கடந்தது.

பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பு செய்த ஸ்டோக்ஸ், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கிலும் அசத்தினார். 312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் வாண்டெர் டசன் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அவர்கள் இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். அவர்களும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 207 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பேட்டிங்கில் அசத்திய ஸ்டோக்ஸ், பவுலிங் வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கில் சும்மா தெறிக்கவிட்டார். 2 கேட்ச்களை பிடித்ததோடு பிரிடோரியஸை ரன் அவுட்டும் செய்தார். அந்த 2 கேட்ச்களில் ஃபெலுக்வாயோ அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் ஒற்றை கையில் ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் மிகவும் அபாரமானது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அசத்திய ஸ்டோக்ஸ் தான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். உண்மையாகவே ஆட்டநாயகன் விருதுக்கு அர்த்தம் சேர்த்தார் ஸ்டோக்ஸ். அனைத்து வகையிலும் அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்காற்றினார்.