கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் 13வது சீசன் ஊரடங்கால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்கார டி20 லீக் ஐபிஎல் தான். அதிகமான பணம் புழங்கும் டி20 லீக் ஐபிஎல். எனவே வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல் நடத்தப்படாவிட்டால், ரூ.4000 கோடி பிசிசிஐ-க்கு இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். 

ஆனால் ஐபிஎல்லை எப்படியும் பிசிசிஐ நடத்தியே தீரும். மிகப்பெரிய வருவாய் இழப்பை பிசிசிஐ சந்திப்பதை ஐசிசியே கூட விரும்பாது. எனவே எப்படியாவது ஐபிஎல் நடத்தப்படும். ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி. 

மத்திய 4ம் கட்ட ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தியுள்ளது. விளையாட்டு ஸ்டேடியங்களை ரசிகர்கள் இல்லாமல் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் இல்லாமலும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமலும் பிசிசிஐ, ஐபிஎல்லை நடத்த விரும்பவில்லை. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஸ்டேடியங்களை திறக்க அனுமதித்தாலும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர முடியாது. ரசிகர்களும் இருக்கமாட்டார்கள். மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஐபிஎல்லை நடத்துவது குறித்து இப்போதே எந்த முடிவும் எடுக்க முடியாது. மைதானங்களை திறக்கலாம் என்பதால், பிசிசிஐ ஒப்பந்த வீரர்களுக்கு டிரெய்னிங் கேம்ப் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.