இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. 

இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. கடந்த ஜூலை 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

ஒரு பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட டாம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ராபின் சிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு இம்மாத மத்தியில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை நடத்தவுள்ளது. இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் என மொத்தமாக 2000 பேருக்கு விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை ஃபில்ட்டர் செய்வதே மிகப்பெரிய வேலை. தலைமை பயிற்சியாளருக்கான போட்டி கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.