IPL 2024: ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் இல்லை – மறுப்பு தெரிவித்த ஜெய் ஷா!
பொத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்படும் என்று செய்தி வெளியான நிலையில், அதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுக்கான அட்டவணை வரும் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை என்று 21 போட்டிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெறும் என்று தகவல் வெளியானது. இதற்காக பிசிசிஐ அதிகாரிகள் ஐக்கிய அரபு நாட்டிற்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்றும், முழு போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறும் என்று கூறியதாக கிரிக்பஸில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வரும் 22ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 7ஆம் தேதி வரையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணையானது நாளையோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.