இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான விசாகப்பட்டின டெஸ்ட் போட்டிக்கு ஓரளவிற்கு கூட்டம் வந்தது. ஆனால் புனே மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் நடந்த போட்டியை காண ரசிகர்கள் வரவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே கூட்டம் இருந்தது. 

டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதன் மூலம் அது சாத்தியம் என நம்புகிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி. கங்குலி எப்போதுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு ஆதரவாளர் தான். ஆனால் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. எனவேதான் அனைத்து போட்டிகளும் வழக்கம்போல பகல் ஆட்டங்களாக நடத்தப்பட்டன. மத்த ஸ்டேடியம்லாம் எதுக்கு கட்டி கெடக்கு..? பல்லாங்குழி ஆடுறதுக்கா..?

இந்நிலையில், பகலிரவு டெஸ்ட் போட்டி ஆதரவாளரான கங்குலி, இந்தியாவில் பகலிரவு போட்டிகளை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கூட்டம் வருவதில்லை என நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். பகலிரவு டெஸ்ட் போட்டிகளின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தற்போதைய சூழலில் வேலைக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ விடுமுறை எடுத்துவிட்டெல்லாம் டெஸ்ட் போட்டியை காண யாரும் வரமுடியாது. எனவே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதுதான் சரியாக இருக்கும். கோலி இதற்கு ஆதரவளிப்பார் என்று நம்புவதாக கங்குலி தெரிவித்தார்.