சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் உயிரிழப்புகளையும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா.

உலகளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 645 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா எதிரொலியாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3க்குள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்டாலும் அடுத்த ஒருசில மாதங்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதனால் தான் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நாடே நெருக்கடியான சூழலில் இருக்கும் போது, கிரிக்கெட்டை பற்றி யோசித்துக்கூட பார்க்க முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஐபிஎல்லும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் நலனும் ஆரோக்கியமும் தான் முக்கியம் என்று ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. 

ஆனாலும் அவரிடம் கிரிக்கெட் போட்டிகள் குறித்து தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள கங்குலி, இப்போதைக்கு(அடுத்த சில மாதங்களுக்கு) இந்தியாவில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படமாட்டாது. மனித உயிர்கள்தான் முக்கியம். எனவே இப்போதைக்கு கிரிக்கெட் போட்டிகள் கிடையாது என்று கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.