டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அதன் மீதான ரசிகர்களின் மோகம் அதிகமானதால், டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க ரசிகர்கள் மைதானத்திற்கு வருவது குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்தினால், பள்ளி, கல்லூரி, பணி முடிந்து மாணவர்களும் மற்றவர்களும் மாலை நேரத்தில் போட்டியை காண மைதானத்திற்கு வருவார்கள் என்பதால், டெஸ்ட் போட்டியை நோக்கி ரசிகர்களை கவர பகலிரவு போட்டியை நடத்த வேண்டும் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தவர் கங்குலி. 

பகலிரவு டெஸ்ட் போட்டி ஆதரவாளரான கங்குலி, பிசிசிஐ தலைவரானதுமே வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக, அதுவும் தனது சொந்த மண்ணான கொல்கத்தாவிலேயே நடத்தி காட்டினார். 

இனிமேல் இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என கங்குலி தெரிவித்திருந்தார். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட மறுத்தது. கங்குலி பிசிசிஐ தலைவரானதும் சூழல் மாற தொடங்கியுள்ளதால் இந்திய அணி பகலிரவு டெஸ்ட்டில் ஆட தயாராகவே உள்ளது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் வரும்போது பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடும் என்று நம்புவதாக சீண்டிவிட்டிருந்தார். 

இதற்கிடையே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்ததாக ஒரு தகவல் பரவிய நிலையில், இந்தியா டுடே என்க்ளேவில் கலந்துகொண்ட கங்குலி, இதுகுறித்து பேசினார். அப்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை 2 பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட அழைப்பதாக செய்தித்தாள்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். அதிகாரப்பூர்வ கோரிக்கை எதுவும் வரவில்லை. ஆனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது ரொம்ப ஓவர். எனினும் கண்டிஷன்களை ஆராய்ந்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.

ஒரு தொடரில் 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆடுவது ரொம்ப ஓவர் என்று கங்குலி கூறியிருப்பதற்கு, அது முடியாது என்றுதான் அர்த்தம். கண்டிப்பாக 2 பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட பிசிசிஐ ஒப்புக்கொள்ளாது. எனவே இது இந்திய அணிக்கு நிம்மதி பெருமூச்சுவிடும் செய்திதான். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் வலுவான அந்த அணிக்கு எதிராக பிங்க் பந்தில் 2 போட்டிகளில் ஆடுவது கடினம்.