இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2021 டி20 உலக கோப்பை வரை சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வார். 

தலைமை பயிற்சியாளரை கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்த நிலையில், பேட்டிங், பவுலிங்,ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணலை தேர்வுக்குழு கடந்த திங்கட்கிழமை நடத்தி முடித்த நிலையில், ஃபிசியோ மற்றும் உடற்தகுதி நிபுணர் பதவிக்கான நேர்காணலையும் முடித்துவிட்டது. 

இந்திய அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் மட்டுமே மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளது. பரத் அருண் மீண்டும் பவுலிங் பயிற்சியாளராகவும், ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் தொடர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணியில் குறை சொல்லும்படி எதுவுமில்லை. இவர்கள் இருவருமே சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். 

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தூக்கியெறியப்படுவது உறுதியாகிவிட்டது. சஞ்சய் பங்காரால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு 2 ஆண்டுகளாக தீர்வு காணமுடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்க நேரிட்டது. பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விக்ரம் ரத்தோர், பிரவீன் ஆம்ரே, ஜோனாதன் ட்ராட், திலன் சமரவீரா ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். 

கடந்த திங்கட்கிழமை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. பேட்டிங் பயிற்சியாளரை தேர்வு செய்ய, சஞ்சய் பங்கார் உட்பட 14 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. தற்போதைய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் உட்பட 12 பேரிடம் பவுலிங் பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்பட்டது. பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் வெறும் கண் துடைப்புதான். 

ஃபிசியோவிற்கான நேர்காணல் 16 பேரிடமும் ஸ்ட்ரெந்த் மற்றும் கண்டிஷனிங் கோச்சுக்கான நேர்காணல் 12 பேரிடமும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. எனவே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் மற்றும் ஃபிசியோ ஆகியோர் இன்றைக்கு அறிவிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.