மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பிசிசிஐ மாற்று திட்டம் ஒன்றை வைத்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கேகேஆர் வீரர் நிதிஷ் ராணா, டெல்லி கேபிடள்ஸ் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல், சிஎஸ்கே அணியை சேர்ந்த சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 14வது சீசன், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் நடக்கவுள்ள நகரங்களில் மும்பயில் தான் கொரோனா பரவல் மிக அதிகமாகவுள்ளது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மகாராஷ்டிராவில் உறுதியான 47,827 கேஸ்களில் 8832 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.

சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மும்பையில் முகாமிட்டுள்ள நிலையில், மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால், அச்சம் அதிகமாகியுள்ளது.
மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், நிலைமை இன்னும் மோசமடைந்தால், மும்பையில் நடத்த திட்டமிட்ட போட்டிகளை ஹைதராபாத் அல்லது இந்தூரில் நடத்த பிசிசிஐ மாற்று ஐடியா வைத்துள்ளது பிசிசிஐ.
