பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் உள்ள கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமிக்கு இரட்டை ஆதாய பதவி குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனைக்குழு நியமிக்கப்படும். கடந்த 2017ம் ஆண்டு இந்த கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

அவர்கள் விலகியதை அடுத்து இந்த முறை தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் கபில் தேவ், அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகிய மூவரும் இருந்தனர். இவர்கள் மூவரும் இணைந்து இந்திய மகளிர் அணிக்கு டபிள்யூ வி ராமனையும் இந்திய ஆடவர் அணிக்கு ரவி சாஸ்திரியையும் தலைமை பயிற்சியாளராக நியமித்தது. 

இந்நிலையில், கபில் தேவ் உள்ளிட்ட மூவருக்கும் பிசிசிஐ ஒழுக்க நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின், இரட்டை ஆதாய பதவியில் இருப்பதாகவும் அதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனால் அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்று பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த வினோத் ராய், ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்தெல்லாம் ஒன்றுமே இல்லை. கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர்களிடம் இரட்டை ஆதாய பதவி குறித்த ஆவணங்கள் பெறப்பட்டுத்தான் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் இரட்டை ஆதாய பதவியில் இருப்பதாக பிசிசிஐ கருதவில்லை. அதன்பின்னர் தான் அவர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சியாளரை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் ஒரே பணி தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதுதான். முறையாக அந்த பணி மேற்கொள்ளப்பட்டு ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகியுள்ளார். சாஸ்திரிக்கு அதிகாரப்பூர்வமாக அப்பாய்ன்மெண்ட் கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அவரது பதவிக்கு ஆபத்தில்லை என்று வினோத் ராய் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.