கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் 13வது சீசன் ஊரடங்கால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் பணக்கார டி20 லீக் ஐபிஎல் தான். அதிகமான பணம் புழங்கும் டி20 லீக் ஐபிஎல். எனவே வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல் நடத்தப்படாவிட்டால், பிசிசிஐ-க்கு சுமார் ரூ.4000 கோடி இழப்பு ஏற்படும். இந்த பேரிழப்பை ஏற்க விரும்பாத பிசிசிஐ, ஐபிஎல்லை நடத்தியே தீரும் உறுதியில் உள்ளது. ஆனால் எப்போது நடத்தப்படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இதற்கிடையே, நான்காம் கட்ட ஊரடங்கை பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்திய மத்திய அரசு, ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் ஸ்டேடியங்களை திறக்க அனுமதியளித்தது. ஆனால் வெளிநாட்டு வீரர்களும் ரசிகர்களும் இல்லாமல் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை.

வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருக்கும் டி20 உலக கோப்பையை, ஐசிசி ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

ஐபிஎல் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ சி.இ.ஓ ராகுல் ஜோஹ்ரி, வெளிநாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டால்தான் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வரமுடியும். அப்படியே வந்தாலும் பயிற்சி போட்டிகளில் ஆடுவதற்கு முன் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின்னர் தான் அவர்களை ஆடவைக்க முடியும். அதனால் இவையெல்லாம் போட்டியின் கால அட்டவணையில் மாற்றங்களையும் தாமதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனாலும் ஐபிஎல்லை நடத்துவதில் பிசிசிஐ நம்பிக்கையாகவே உள்ளது. மழைக்காலத்திற்கு பிறகு நிலைமை சீரடையும் என நம்புகிறோம் என தெரிவித்தார். 

எனவே அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பது தெரிகிறது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிசிசிஐ உன்னிப்பாக கவனித்துவருவதாக ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நிலைமை நாளைக்கே சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கவோ அவசரப்படவோ முடியாது. ஆனால் விரைவில் சீரடைந்துவிட்டால், பிசிசிஐ அக்டோபரில் ஐபிஎல் 13வது சீசனை தொடங்க திட்டமிட்டிருக்கிறது.