உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது.

இந்த உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளை தவிர பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் சிறப்பாக ஆடின. ஆனால் அந்த அணிகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. வங்கதேச அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றது. அந்த அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் மட்டுமே தொடர் முழுவதும் அபாரமாக ஆடினார். 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். லீக் சுற்றுடன் அந்த அணி வெளியேறியிருந்தாலும், ஷகிப் அல் ஹசன் 606 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில்(இரண்டாவது அரையிறுதிக்கு முந்தைய நிலவரம்) இருக்கிறார். அவருக்கு மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால் வங்கதேச அணியால் தேவையான வெற்றிகளை பெறமுடியவில்லை. 

வங்கதேச அணி உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 2020ல் நடக்கும் டி20 உலக கோப்பை வரை ஸ்டீவ் ரோட்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அவரை அதிரடியாக நீக்கியுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இலங்கையில் நடக்கவிருக்கும் தொடருக்கு வங்கதேச அணியுடன் ஸ்டீவ் ரோட்ஸ் செல்லவில்லை.