உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதமடித்த பாபர் அசாம், முன்னாள் ஜாம்பவான் லாராவின் சாதனையை சமன் செய்துள்ளார். 

உலக கோப்பையை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றிகளை பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார் பாபர் அசாம். 

பேட்டிங் ஆடுவதற்கு மிகவும் கடினமாக இருந்த லார்ட்ஸ் ஆடுகளத்தில் மிகவும் சிறப்பாக நியூசிலாந்து பவுலிங்கை எதிர்கொண்டு திறம்பட ஆடி சதமடித்தார் பாபர் அசாமின். பாபர் அசாமின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதற்கு முதன்மையான இடம் கிடைக்கும். அந்தளவிற்கு சிறந்த இன்னிங்ஸ். இந்த போட்டியில் 101 ரன்களை குவித்த பாபர் அசாம், இந்த உலக கோப்பையில் இதுவரை 333 ரன்களை குவித்துள்ளார். 

இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் பட்டியலில் லாராவை சமன் செய்துள்ளார் பாபர் அசாம். 1992ம் ஆண்டு உலக கோப்பையில் லாரா 333 ரன்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 1996 உலக கோப்பையில் 523 ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 372 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும் 1999 உலக கோப்பையில் 354 ரன்களை குவித்த ரிக்கி பாண்டிங் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இவர்களில் பாண்டிங் மற்றும் டிவில்லியர்ஸின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துவிடுவார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாது சற்று கடினம். எனினும் சச்சின் சாதனையையும் முறியடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.