உலகின் மிகப்பெரிய மற்றும் பணம் அதிகமாக புழங்கக்கூடிய டி20 லீக் என்றால் அது ஐபிஎல் தான். வெறும் இரண்டரை மாதங்களில் கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் என்பதால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர்.

பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்பதற்காக கோலி உட்பட இந்திய அணியின் சீனியர் வீரர்களை ஸ்ளெட்ஜிங் செய்ய பயப்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், ஆரோன் ஃபின்ச் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லின் நட்சத்திர விரர்களாக ஜொலிப்பதுடன், அனைத்து சீசன்களிலும் ஆடிவருகின்றனர். ஐபிஎல் 13வது சீசன் கொரோனாவால் நடக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் மீது மைக்கேல் கிளார்க் பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஸ்லெட்ஜிங்கிற்கு பெயர்போனவர்கள் ஆஸ்திரேலியர்கள். அப்படியிருக்கையில், விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ய பயப்படுகிறார்கள் என்றார் கிளார்க். அதற்கு அவர் கூறிய காரணம், ஆஸ்திரேலிய வீரர்களின் சுயமரியாதையை கெடுக்கும் விதமாக இருந்தது. 

அதாவது ஐபிஎல்லில் தங்களுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஐபிஎல்லில் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணியில் தாங்கள் ஏலத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் ஐபிஎல்லில் இணைந்து ஆடுவதற்காகவும் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாது மற்ற நாட்டு வீரர்களுமே பயப்படுகின்றனர் என்று கிளார்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், கோலியிடம் நிறைய பேர் இனிமையாக நடந்துகொள்வதில்லை; அவரை அவுட்டாக்க வேண்டாம் என்பது போன்ற மனநிலையில் ஆடியதுமில்லை. எனக்கு தெரிந்து கோலியிடம் நிறைய பேர் இனிமையாக நடந்துகொள்வதில்ல.

கோலிக்கு எதிராக பந்துவீசும்போது பவுலர்கள் அவரை அவுட்டாக்க வேண்டும் என்ற மனநிலையில் தங்களது சிறப்பான பங்களிப்பை ஆஸ்திரேலியாவுக்காக அளிக்கிறார்கள். பேட்ஸ்மேன்களும் அப்படித்தான்.. எனவே கோலியை யார் போட்டியாளராக பார்க்காமல் அவ்வளவு ஈசியாக அவரை விட்டது என்று தெரியவில்லை. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, கோலி அவரது கெரியரின் மிகச்சிறந்த ஃபார்மில் அருமையாக ஆடிக்கொண்டிருந்த காலம் அது. அதனால் அவரை ஸ்லெட்ஜிங் செய்து அவரை மேலும் சிறப்பாக ஆடும் வகையில், தூண்டிவிட வேண்டாம் என்று முடிவெடுத்தோமே தவிர, யாரும் பயப்படவெல்லாம் கிடையாது.

ஐபிஎல் ஏலத்தை மனதில் வைத்தெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவதில்லை. கோலிக்கு பந்துவீச ஓடும்போது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ஐபிஎல் ஏலமெல்லாம் நினைவுக்கு வராது. ஆஸ்திரேலியாவுக்காக ஆடும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தங்களது சிறப்பான ஆட்டத்தைத்தான் எப்போதும் வெளிப்படுத்துகிறார்கள் என்று மைக்கேல் கிளார்க்கிற்கு டிம் பெய்ன்  பதிலடி கொடுத்துள்ளார்.