கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடனோ அல்லது சக வீரர்களுடனோ உரையாடுவது, ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்வது என பொழுதுபோக்குவதுடன், ரசிகர்களையும் எண்டர்டெய்ன் செய்துவருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் வளர்ந்துவரும் இளம் ஸ்பின்னர் அஷ்டன் அகர், ஆல்டைம் சிறந்த அணியை தேர்வு செய்திருக்கிறார். ஆல்டைம் சிறந்த டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்களை பயங்கரமாக எண்டர்டெய்ன் செய்த வீரர் சேவாக் என்று புகழாரம் சூட்டிய அகர், சேவாக்கை தனது மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். மூன்றாம் வரிசையில் தனது ஆல்டைம் ஃபேவரைட் வீரரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்வதாக கூறிய அஷ்டன் அகர், இந்த அணியின் கேப்டனாகவும் பாண்டிங்கை தேர்வு செய்தார். 

நான்காம் வரிசைக்கு சச்சின் டெண்டுல்கரையும் ஐந்தாம் வரிசை வீரராக பிரயன் லாராவையும் ஆறாம் வரிசைக்கு வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸையும் தேர்வு செய்த அஷ்டன் அகர், விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட்டை தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலராக பிரெட் லீ மற்றும் ஷோயப் அக்தரை தேர்வு செய்த அகர், ஸ்பின்னர்களாக ஷேன் வார்ன் மற்றும் இலங்கையின் ரங்கனா ஹெராத் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் க்ளென் மெக்ராத்தை அகர் ஆல்டைம் லெவனில் தேர்வு செய்யவில்லை. 

அஷ்டன் அகர் தேர்வு செய்த ஆல்டைம் லெவன்:

சேவாக், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட்(விக்கெட் கீப்பர்), ப்ரெட் லீ, ஷேன் வார்ன், ஷோயப் அக்தர், ரங்கனா ஹெராத்.