முதல் டி20 போட்டி 27ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர் லெவன் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே பயிற்சி போட்டியாக ஒரு போட்டி நடத்தப்பட்டது. நேற்று நடந்த அந்த போட்டியில் பிரைம் மினிஸ்டர் லெவன் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 131 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் இலக்கை எட்டி ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் லெவன் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. இலங்கை அணியின் பேட்டிங்கின்போது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் டிரிங்ஸ் எடுத்துச்சென்றார். ஆடும் லெவனில் இல்லாத வீரர்கள் தான் டிரிங்ஸ் எடுத்துச்செல்வார்கள். ஆனால் தங்கள் நாட்டு வீரர்களுக்கு பிரதமரே டிரிங்ஸ் எடுத்துச்சென்ற சம்பவமும் அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. 

தான் ஒரு பிரதமர் என்றும் பாராமல், ஆஸ்திரேலிய அணியின் தொப்பியை அணிந்துகொண்டு மிகவும் எளிமையாக வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச்சென்ற சம்பவத்தை கண்டு உலக கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பாராட்டிவருகின்றனர். பிரதமரே டிரிங்ஸ் எடுத்துவந்த சம்பவம், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.