உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணி தான் வெல்லும் என பெரும்பாலான ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய அணியும் வலுவாகவே உள்ளது. 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பையில் நெருக்கடியை சமாளித்து அபாரமாக ஆடுவதில் ஆஸ்திரேலிய அணி கைதேர்ந்த அணி. இந்த முறை மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் வெற்றிகரமான கேப்டனும் 2 முறை கோப்பையை வென்று கொடுத்தவருமான ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி குறித்து கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த கிரிக்கெட் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங்கை துணை பயிற்சியாளராக நியமித்ததும் போதும்; அந்த அணியின் வீரர்கள் அனைவரும் பாண்டிங்கை தங்களது ஆட்டத்திறனால் கவர்வதிலேயே குறியாக உள்ளதாக ஃபின்ச் தெரிவித்துள்ளார். ஆனால் அது ஆரோக்கியமான விஷயம் தான் என்றும் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.