உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. வரும் 9ம் தேதி முதல் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

இந்த உலக கோப்பையில் வீரர்களின் காயம் சில அணிகளுக்கு பெரிய பின்னடைவாக இருந்திருக்கிறது. ஸ்டெய்ன், தவான் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் தொடரிலிருந்து விலகினர். தவான் விலகியது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக இல்லை. ஆனால் ஸ்டெய்னின் விலகல், தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய அடியாக இருந்திருக்கிறது. 

நடப்பு உலக கோப்பையில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தான். ஆஸ்திரேலிய அணிக்கு ஒரேயொரு லீக் போட்டி மிஞ்சியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த போட்டி நாளை நடக்கவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷான் மார்ஷுக்கு பயிற்சியின்போது கையில் அடிபட்டது. அதனால் பாதியில் பயிற்சியிலிருந்து வெளியேறிய ஷான் மார்ஷுக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கம்ப் அணியில் இணைந்துள்ளார். 

ஹேண்ட்ஸ்கம்ப் இங்கிலாந்தில்தான் இருந்தார் என்பதால் அப்படியே அணியில் இணைந்துவிட்டார். ஹேண்ட்ஸ்கம்ப் கடந்த ஓராண்டாக ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக ஆடிவந்தார். ஸ்மித்தும் வார்னரும் தடை முடிந்து அணியில் இணைந்ததால்தான் ஹேண்ட்ஸ்கம்பிற்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் தற்போது ஷான் மார்ஷ் காயத்தால் ஹேண்ட்ஸ்கம்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேக்ஸ்வெல்லுக்கும் பயிற்சியின் போது கையில் அடிபட்டது. ஆனால் அவருக்கு எலும்புமுறிவு எதுவும் இல்லாததால் எந்தவித பிரச்னையும் இல்லை.